<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=7029294&amp;blogName=KarthikRamas%3A+Nothing+but+Blogs&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=SILVER&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http%3A%2F%2Fkarthikramas.blogspot.com%2Fsearch&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http%3A%2F%2Fkarthikramas.blogspot.com%2F" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

KarthikRamas: Nothing but Blogs

போதனை!




போதனைகளை உன்னிடமே வைத்துக்கொள்
என்று நண்பன் ஒருவன் சொன்னான்.சொன்னான் என்று சொல்வதை விட பொறிந்து தள்ளினான் என்று சொல்வது பொருந்தும். அல்லது எரிந்து விழுந்தான் என்றாலும் சரியே. இதே வார்த்தைகளை நான் பலமுறை உபயோகித்திருக்கிறேன் வாழ்வில். நான் இன்னும் ஒரு படி மேலே போய், ஏன் போதனைகளை தருகிறீர், அதற்கு பதிலாக கொஞ்சம் பணம் தந்தால் உதவியாக இருக்குமே என்று போதித்தவரின் நாடியிலே கொஞ்சம் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதும் என் வழக்கம்.


இன்றிருக்கும் புரிதலில் , வாழ்க்கையே போதிமரம்தான் (போதை மரம் என்று வாசிக்கப்படாது!). போதனைகளைஉன்னிடமே வைத்துக்கொள் என்று சொல்வது என்பது , எனக்கிருக்கும் எரிச்சலில் எதுவும் என் காதுகளில் ஏறவில்லை என்று சொல்வதுதான். ஏனெனில், மன அமைதியில்ல நேரத்தில் குழந்தை அழுதால் கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதைப்போன்ற நேரங்களில் மாற்றுக்கருத்தை பரிசீலிக்கும் மனம் வாய்க்கப்பெறுவதில்லை என்பதுதான் உண்மை.
சில நேரங்களில் நண்பர்களில் சிலர், இதைச் செய்துவிட்டேன், மனதுக்கு வருத்தம் தாங்கவில்லை எனக்கு ஏதாவது சொல்லேன்(கவுன்செலிங்) என்பதுண்டு. நானும் மனதுக்குப் பட்டதை சொல்வதும் உண்டு.குறிப்பிட்ட நிகழ்வை பற்றி வியாக்கியாணத்தை முடித்து கடைசியில் நீயும் மனிதன்தானே , மனிதன் செய்யக்கூடாத எதையும் செய்யவில்லை; முழுதுமே உன் தவறல்ல, நீ ஒரு பகுதிதான், எதிராளியும், சூழ்நிலையும் இன்னொரு அரைப்பகுதிக்கும் மேல் இந்நிகழ்விலே பங்கெடுத்திருப்பதை ஏன் மறுக்கிறாய் என்று முடித்த போதனைகள் உண்டு. அவை போதனைகளே அல்ல என்று கூட என்னால் வாதிடமுடியும். நண்பர்களிடம் பேசுவது எப்போதும் நட்பின் பேச்சே அன்றி போதனையாக எப்படி எடுத்துக்கொள்ளமுடியும்? அவை நட்பினை குறித்த அக்கறை.நண்பரின் மனத்தினை குறித்த நல்லெண்ணம். அதையொட்டியதொரு சிந்தனையின் சொல்வடிவம். இதை போத‌னை என்று கொன்டால், போத‌னை யின்றி ஒரு நாளும் ம‌னித‌ன் வாழ்ந்த‌தே இல்லை என்று என்னால் அடித்துச் ச‌த்திய‌ம் செய்து பேச‌முடியும். இர‌யிலிலே சாக்கிர‌தை, ப‌ஸ்ஸிலே தொங்காதே, வீண் செல‌வைக் குறை, எத‌ற்கு அள‌வுக்கு அதிக‌மாய் குடிக்கிறாய்? , குடியை விடு, என்னை அழ‌வைப்ப‌து போல் பேசாதிரு, இன்னும் ஒரு சொல் சொன்னால் உயிரை மாய்த்துக்கொள்வேன், இரண்டு குழந்தைகள் போதாதா? குழந்தைகள் எ/உனக்கெதற்கு? ,பாலின்பமே போதும், பாலின்பம் போதாது என எத்த‌னை எத‌த‌னை போத‌னைக‌ள். ஆக‌ போத‌னைக‌ளில் எத்த‌னையோ வித‌ம், எல்லாம் எதிர்பார்ப்பை கொண்ட‌து என்ற‌ அள‌வில் ஒன்று போலான‌துதான். ஆனால் சில‌ ந‌ம்மை கோப‌த்துக்குள்ளாக்கும் வ‌ல்ல‌மை பெற்றவை. ந‌ம்மை, நம் இருப்பை , நம் அதிகாரத்தை, நம் பழக்கத்தை, நம் புத்திசாலித்தனத்தை நிராக‌ரிப்ப‌ன‌வாக‌ அமையும் போதே இருக்கின்ற‌ அமைதையையும் இழ‌ந்து அமைதியைப் பெற‌ த‌ர‌க‌ர்க‌ள்/த‌ர‌குக‌ள் தேவையாகிவிடுகின்ற‌ன‌.
சாதாரண வாழ்வில் , போதனைகள் ஏற்கப்படுவது, மறுக்கப்படுவது,எதிர்க்கப்படுவது எல்லாமே அப்போதனையினை ஒட்டி போதிக்கப்ப்ட்டவருக்கு உண்டாகும் நலனை சார்ந்தே நடக்கும் நடக்கமுடியும். இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. மனிதன் சுயநலமானவன். அது தவறா இல்லையா என்பது மனிதனின் சிந்திக்கும் பக்குவத்தினையொட்டி வெவ்வேறான மற்றங்களோடு வெளிப்படுகிறது. இன்னும் அச்சுயநிலம் நிகழ இருக்கும் சூழலையும் , பாதிக்கப்படுபவர் குறித்தும்,நலன்பெறுபவரின் நலனின் அளவீட்டையும் பொறுத்து குரூரத்தன்மையுடைத்தாய் அமைவதும் ஆகும்.


ஆக போதனை இல்லாத மனிதன் இல்லை; போதிக்காத மனிதனும் (இல்லை). போதனைகள் இன்றி நாகரிகம் வளரவில்லை. போதனைகள் இன்றி சமத்துவம் நிறுவப்படவில்லை. போதனைகள் இன்றி விடுதலை இல்லை. போதனைகளால் இன்புறுவதும், போதனைகளால் மானத்தை இழப்பதா என்று குமுறுவதும், போதனைகளை எதிர்ப்பதும் மனிதன் வேறு வேறு நேரத்தில் எடுக்கும் நிலையைப் பொறுத்து வேறுபடுவதாய் அமைகிறது.

Labels:

எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 2 comments |

பொங்கல் நினைவுகள்.


இன்னொரு பொங்கல் பற்றிய பதிவு.



சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்த எனக்கு பொங்கல் ஒரு "புதுதுணியெடுக்கும்" பண்டிகை என்ற அளவில் முக்கியமானதாக இருந்தது. சிறு வயதில் பண்டிகை என்றாலே எங்கிருந்தோ துள்ளி வரும் குதூகலம் பொங்கலுக்கும் பொங்கும். எனக்கு நினைவு தெரிந்து பொங்கல் கொண்டாடியது ஞாபகத்தில் இருப்பது என்பது , எங்கள் வீட்டு முன்னால் இருக்கும் மூன்று படிக் கட்டைகளில் நான் என் அக்கா இன்னொரு அக்கா என மூவருமாக ஆளுக்கு ஒன்றாக பிடித்துக்கொண்டு குதிரைசவாரி செய்துசெய்து கொண்டே கரும்பு சாப்பிடுவதிலிருந்துதான் ஆரம்பிக்கும். அதற்கும் பெரிய அக்கா வயதிலே முத்தவர் என்பதால் இந்த குதிரைச்சவாரிக்கு வந்ததில்லை போல‌.

மொத‌ நாள் போகிக்கி அப்பா‌ எங்கயாச்சும் தேடி அலைஞ்சாச்சும் "மோள‌ம்" வாங்கி வ‌ந்து காலையில‌ நாலு ம‌ணிக்கு எல்லாம் எழுப்பி, த‌லையில‌ குளிருக்கு துண்டை எடுத்து நல்லா சுத்தி க‌ட்டி விட்டு வ‌ச‌லுக்கு கூட்டி வ‌ந்து உட்கார‌ வெச்சுடுவாரு. அக்காங்க‌ கோல‌ம் போட்ட‌ இட‌த்துல‌ எரிக்காம‌ கொஞ்ச‌ த‌ள்ளி ப‌ழைய‌ பாயி, ப‌ழைய‌ சீல‌ , கிழிஞ்ச டைய‌ரு காயித‌ம் வர‌‌ட்டி கொஞ்ச‌ம் மண்ணெண்ணெய் பாட்டில் ச‌கித‌மா, கொட்டு கொட்டுன்னு கொட்டுற‌ மோள‌ம். மோள‌த்தை அப்ப‌ப்ப‌ லேசா நெருப்பில‌ காட்டினா ந‌ல்லா அடிக்கும்னு அப்பா சொல்லுவாரு. மோள‌ம் அடிக்குற‌ குச்சில முனையில லேசா தார் உருட்டி ஒட்டி வெக்க‌னுமாம். அந்த‌ மோள‌த்தை அடி அடின்னு அடிச்சு ஓய்வேன் அன்னிக்கி காலைல‌ முழுக்க‌. அடி என்ன‌மோ ஒரே அடிதான், "டொய்ங் டொய்டொய்ங் டொய்ங் டொய்டொய்ங்". ஆனா சலிப்பே இருக்காது. நேர‌ம் ந‌க‌ர‌வே ந‌காராது. பொழுது விடிய‌ மிக‌ மிக‌ மெதுவா ஆகும்.தெருவுல நடந்தா அங்கங்க வீட்டுவாசல்ல எரிச்ச போகி எரிப்புலேர்ந்து புகை அப்படியே லேசா வந்துட்டுருக்கும்.சில போகிக்கு மோளம் அடிச்சு களைச்சு போயி தூங்குனது கூட உண்டு.

படிக்கட்டை (கட்டைச் சுவர்)என்பது வீட்டிற்கு ஏறிசெல்லும் படிகளின் இருமருங்கிலும் உட்கார இருக்கும் மேடை போல இருக்கும். அந்தக் காலத்தில் அப்பா ஆதம்பாக்கத்தில் 1957 இல் ஊருக்கு வந்த போது நல்ல மழையாக பெய்து "ஊரே வெள்ளக்காடா" இருந்ததாம். அதனால் நான்கு அடி நிலத்தின் கீழேயும் மூன்று அடி மேலேயுமாக மிக உயரமாக ஏழடி வைத்து போட்ட "பேஸ்மண்ட்டு". கட்டைச்சுவர் மூன்றும் முக்காலடி செங்கல் சுவர்கள். பன்னிரண்டுக்கு பதினாறு என்ற அளவில் நான்கு பெரிய அறைகள்.எட்டாம் வகுப்பு படிக்கும்போது அப்பா "ஆசையா லோன் போட்டு" கட்டிய பெரிய வீட்ட அக்கா கல்யாணத்துக்காகவும் தொழில்ல வந்த நஷ்டத்தாலையும் விக்கவேண்டியதா போச்சு. அது வரைக்கும் பொங்கல் அந்த பெரிய வீட்டுலதான் . பெரிய வீட்டுக்கு பின்னால நல்லா விசாலாமான இடம் இருக்கும் . அங்கதான் இரண்டிரண்டா ஆறு செங்கல்ல "ப" மாதிரி கூட்டி அதுக்கு மஞ்சள் விபூதி குங்குமம் எல்லாம் போட்டு , பானைக்கும் அது மாதிரி திருநீறு பூசி மஞ்சள் கொத்து இலையோடு சுத்தி கட்டி பொங்கல் ஆக்குவோம்.நெருப்புக்கு சுள்ளு பொறுக்கி வந்து தரனும். கொஞ்சம் லேசா மண்னெண்ணெய் ஊத்திக்கிட்டா பெரிய குத்தம் ஒன்னும் இல்லன்னு அக்கா சொல்லும். மேல்கரும்பு வெட்டி பக்கத்துல தழையோட சாத்தி இருக்கும். பொங்கல் இந்த பக்கமா தெற்கால பொங்குனா "புள்ள குட்டிக்கு நல்லது", அந்த பக்கம் கிழக்கால பொங்குனா "பெரியவங்களுக்கு நல்லது" இப்படின்னுட்டு பக்கத்து வீட்டு பாட்டி சொல்லும். இப்ப யோசிச்சா அது எந்தப் பக்கம் பொங்குனாலுமே "நல்லது"ன்னுதாம் சொல்லும். அப்பா பொங்கல் பொங்கும்போது "எல்லாம் நல்லா சத்தாம கத்தனும்"னு முன்கூட்டியே சொல்லி ஆயத்தமாக்கி வெச்சுடுவார். அப்படியும் நாங்க கொஞசம் முன்னாடியே கத்த ஆரம்பிச்சுடுவோம். "பொங்கலோ பொங்கல்" "பொங்கலோ பொங்கல்". வீட்டு வாலு இன்னும் நாலு முறை அதிகமா கத்தும். பானை க‌றுத்துருக்கும். பொங்க‌ல் வ‌ழிஞ்சுருக்கும். லேசா புகை மூட்டமா இருக்கும். வெயில் ப‌ளிச்சுன்னு அடிக்கும். சுத்தி ப‌ச்சையா புல்லு இருக்கும். அப்பா அம்மா அக்காங்க‌ நான் எல்லாம் புது ச‌ட்டை போட்டிருப்போம். அதுக்கப்புறம் பெரிய பித்தளை தாம்பாளத்துல அரிசி, காய்கறை வெச்சு சுரியனுக்கு சுத்தி காமிச்சு , கற்பூரம் ஏத்தி உழுந்து கும்பிடனும். எதோ ஒரு புது உல‌க‌த்துல நுழைஞ்சு சாமி கும்பிடுற‌மாதிரி ஒரு உண‌ர்வு வ‌ந்துடும். ஒரு பொங்கலுக்கு அப்பா வங்கித்தந்த நீலமும் வெள்ளையும் கோடு போட்ட சட்டை கம்பியில மட்டி கிழிஞ்சு போச்சு. அதுக்கப்புறம் அன்னிக்கு பழைய சட்டைதான். சட்டை கிழிஞ்சதலா நினைவுல தைச்சுருச்சு போல.அன்னிக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு.

மாட்டுப் பொங்க‌லுக்கு, ப‌க்கத்துல‌ வேள‌ச்சேரிக்கு கொஞ்ச‌ம் முனால‌ இருக்குற‌ வ‌ய‌ல்கார‌ங்க‌மாட்டு வ‌ண்டி முழுக்க‌ புள்ளைங்க‌ள் ஏத்திக்கிட்டு, க‌ல‌ர் ரிப்பன், பலூன் எல்லாம் மாட்டுக்கு க‌ட்டி உட்டுட்டு க‌த்திகிட்டே தெரு வ‌ழியா போவாங்க‌. அப்ப‌டியே கோயிலிக்கு போயி மாட்டுக்கு பொட்டு வெச்சு ஆர‌த்தி காட்டுவாங்க‌. அந்த் வ‌ண்டி பின்னாடி ஒடுற‌துல‌ அவ்வ‌ள‌வு குஷி. மாட்டுக்கு ப‌ய‌ந்துதான் வ‌ண்டிக்கு பின்ன‌டி ஓடுன‌ம் போல்ருக்கு.சாயந்திரம் பூராவும் இப்படி தெருவுல இப்படி சும்மா கூட்டாளிகளோட சுத்துறதே பொழப்பு.
***
இன்னிக்கு காலை ஆபீஸ்ல யாருமே வரலை. சிலர் ஊருக்கு லீவுக்கு போயிருக்காங்க. தனியா உக்காந்துருக்கன். இந்தியாவுல இருந்திருந்தா அப்பா கூட உட்கார்ந்து ஒருவேளை படையல் சாப்பாடாச்சும் சாபிட்டுருக்கலாம்னு நினைச்சா பெரு மூச்சு வராம இல்ல.
எழுதத்தூண்டிய செல்வாராஜின் இடுகை.

Labels: , , ,

எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 4 comments |