கருணாநிதி அவிழ்த்தது புளுகு மூட்டையா?
கருணாநிதி அவிழ்த்தது புளுகு மூட்டையா?
:
:
:
நன்றி கீற்று.கொம்
பிரபாகரன் - ஒரு கட்சி சர்வாதிகாரமும் தி.மு.க. செயற்குழு தீர்மானமும்
பெ.மணியரசன்
தி.மு.க. தலைமைச் செயற்குழு தீர்மானம், அதை ஒட்டி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியவை அனைத்தும் அக்கட்சி, முக்காட்டை நீக்கி முழுமையாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக வீதிக்கு வருகிறது என்பதைக் காட்டுகிறது. பிரபாகரன் சர்வாதிகாரி என்றும் மற்ற தலைவர்களை அழித்துவிட்டார் என்றும் விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியாது என்றும் இந்திய அரசுக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டவே இந்த செயற்குழு கூட்டப்பட்டது என்று தெரிகிறது. ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகச் சிங்களப்படை கொன்று குவிக்கும் இக்காலத்தில், அந்த இனப்படுகொலையைத் தடுக்க விடுதலைப்புலிகள் வீரப்போர் நடத்திக்கொண்டிருக்கும் மிக நெருக்கடியான நேரத்தில் கருணாநிதி விடுதலைப் புலிகளை இழிவுப்படுத்துகிறார்.
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற ஓர் அமைப்பை உருவாக்கப் போகிறார்களாம். அதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆகியவை வேண்டுமானால் சேரலாம். அதிலும் செயலலிதா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருணாநிதி தலைமையில் சேரும் என்று எதிர்பார்க்க முடியாது. மிச்சம் காங்கிரஸ்தான். ஈழச்சிக்கலில் காங்கிரசோடு கொள்கை உடன்பாடு கொண்டுள்ளார் கருணாநிதி என்பது உறுதியாகிவிட்டது. தி.மு.க. செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், சிங்கள அரசைச் சாடியதை விட பிரபாகரனைச் சாடியதே அதிகம்.
பிரபாகரன் எப்பொழுதோ இந்து ஏட்டுக்குக் கொடுத்த செவ்வியில் தமிழ் ஈழம் கிடைத்தால் சர்வாதிகார ஆட்சி நடத்துவோம் என்று கூறியதாகக் கருணாநிதி சொல்கிறார். அது உண்மையல்ல. யுகாஸ்லாவியாவில் இருப்பது போன்ற ஒரு கட்சி ஆட்சிமுறை இருக்கும் என்றுதான் பிரபாகரன் கூறியிருந்தார். யுகாஸ்லாவியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அப்போது நடந்தது. அன்று, சோவியத் ஒன்றியத்தில் ஒரு கட்சி ஆட்சிதான் நடந்தது. இன்று சீனா, வியட்நாம், கியுபா, வடகொரியா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளில் ஒரு கட்சி ஆட்சிமுறை தான் நடக்கிறது. அவ்வாறான ஒரு கட்சி ஆட்சி முறையை ஒருவர் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் அவ்வாறான ஒரு கட்சி ஆட்சி அரசு உலகில் ஏற்கப்பட்டு, அந்நாடுகள் பல கட்சி நாடுகளுடன் நல்லுறவு கொண்டுள்ளன. அரசு அமைப்பு முறைகளில் ஒரு கட்சி ஆட்சி முறையும் ஒன்று.
யுகாஸ்லாவியத் தலைவர் டிட்டோ ஒரு கம்யுனிஸ்டாக இருந்தாலும் சோவியத் முகாமில் சேராமல் அணிசேரா நாடாக யுகாஸ்லாவியாவை வழி நடத்தினார். அது போல் தான் நிறுவ வரும்பும் தமிழீழம் சோசலிசப் பாதையைப் பின்பற்றினாலும் அது தமது மண்ணிற்கு ஏற்ற வடிவம் பெறும் என்றும், அணி சேரா நாடாக தமிழீழம் திகழும் என்றும் அப்பேட்டியில் பிரபாகரன் கூறியிருக்கிறார். இதனைக் கருணாநிதி கொச்சைப்படுத்தி, பிரபாகரன் அதிகார வெறியர் என்று காட்டவும், சர்வாதிகாரி என்று காட்டவும் திரிபு வேலைகளைச் செய்கிறார். ஒரு கட்சி ஆட்சி என்பதற்கு மாறாக ஒரு குடும்ப ஆட்சி நடக்கும் என்று பிரபாகரன் கூறியிருந்தால் கருணாநிதி மனநிறைவடைந்திருப்பாரோ என்னவோ?Labels: கருணாநிதி, தமிழீழம், பிரபாகரன்
எழுதியவர்: KARTHIKRAMAS,